Sunday, May 3, 2009

25 : அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள ! ...................................... 01
செல்வத்துள் சிறந்த செல்வம் அருட்செல்வம். மற்ற பொருட்செல்வம் எல்லாம் இழிவானவர்களிடம் கூட இருக்கலாம்.

நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை ! ................................... 02
எப்படிப்பார்த்தலும் சரி - அருளே வாழ்வுக்குத் துணையாகும். எனவே நல்ல வழிகளை நாடி அருட்செயல் புரிதல் வேண்டும்.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல் ! ...................................... 03
நெஞ்சம் கனியும் அருளுடையார்க்கு துன்பம் நிறைந்த இருள் உலகம் எப்போதுமில்லை.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கில்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை ! ...............................04
பிற உயிர்களை அன்போடு காத்து அருள் செய்வார்க்கு தன்னுயிர் அஞ்சும் படியான துயர் எப்போதும் இல்லை.

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி ! .....................................05
அன்போடும் அறிவோடும் வாழ்வார்க்குத் துன்பமில்லை என்பதற்கு இந்த வளமான பூமியே சான்றாகும். காற்றும் மழையும் இயற்கை வளமும் நாம் கேட்டு வருவதில்லையே !

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார் ! ..........................06
அன்பின்றி அருள் மறந்து அல்லவை செய்பவர்கள் வாழ்வின் பயனிழந்தவர்கள் ஆவர்.

அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு! ............................ 07
பொருளில்லாதவர்க்கு இவ்வுலக இன்பம் இல்லாதது போல் அருளில்லார்க்கு வாழ்வில் புக்ழ் இன்பம் இல்லாது போகும்.

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது ! ...................................08
செல்வ வளம் இல்லாதவர் ஒரு காலத்து வளம் பெற்று வாழலாம். ஆனால் அருளில்லாதவர் ஒரு நாளும் நலம் பெற்று வாழ இயலாது.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம் . ................................09
அன்பும் அறிவும் இல்லாதவன் நல்வாழ்வு வாழ்தல் என்பது அறிவுத் தெளிவற்றவன் மெய்ப்பொருள் ஆய்தல் போன்றது.

வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து. .........................10
நாம் நம்மை விட மெலியாரிடம் செல்லும் போது நாம் நம்மில் வலியார் முன் சென்றால் என்ன ஆவோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இரக்கம் என்பது நெஞ்சில் வேண்டும்.

செல்விஷங்கர்