Sunday, July 27, 2008

18 : வெஃகாமை

01 : நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

நடுநிலைமை இன்றி பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள ஆசைப்பட்டால், நம் குடிச்சிறப்பும் அழிந்து நம்க்குக் குற்றங்கள் குறையாக வந்து சேரும். அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படுதல் அழிவையே தரும்.

02 : படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்

நடுவு நிலைமை தவறி நடக்க நாணுபவர்கள், பிறன் பொருளை ஆசையால் பறித்துக் கொள்ளும் பழிபடு செயலைச் செய்ய மாட்டர். செய்யத்தகாதன செய்ய நாண வேண்டும்.

03 : சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

நிலைத்த இன்பத்தை விரும்பும் நற்பண்பாளர், சிற்றின்பம் கருதி பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள நினைக்கும் அறனில்லாச் செயலை ஒரு போதும் செய்ய மாட்டர்.

04 : இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் நல்லோர் வறுமையால் பிறர் பொருளைக் கவர நினைக்க மாட்டார்கள்.

05 : அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

அடுத்தவன் பொருளை அடைய விரும்பும் அறிவற்ற செயலைச் செய்யும் நுண்ணறிவாளரின் அறிவால் ஒரு பயனும் இல்லை ! அறிவின் பயனே நன்மை தீமை பகுத்துணர்வது !

06 : அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

நல்லறத்தை விரும்பி இல்லறம் நடத்துபவன் பொருளாசை கொண்டு பிறன் பொருளைக் கவர நினைத்தால் அவன் பெருமை கெட்டு விடும். பேராசைப் படுவதே பெருமையைக் குலைக்கும்.

07 : வேண்டற்க வெஃகியான் ஆக்கம் விளைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன்.

பிறன் பொருளைக் கவர்ந்து அதனால் வரும் வளர்ச்சியை நாம் ஒருபோதும் விரும்பக் கூடாது. விரும்பினால், கவர்ந்த செல்வம் ஒரு போதும் நற்பயன் தராது. நல்வழிக்கு நற்செல்வமே உதவும்.

08 : அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

நம் செல்வம் குறையாமல் இருக்க வேண்டுமெனில் நாம் பிறர் கைப்பொருளைக் கவர ஆசைப் படுதல் கூடாது.

09 : அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்து ஆங்கே திரு.

அறன் அறிந்து அடுத்தவன் செல்வத்திற்கு ஆசைப்படாதவனைத் தேடி, திருமகள் தானே தான் சேருமிடம் இதுவென அறிந்து சேர்வாள்.

10 : இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு.

அடுத்தவன் பொருளை அடைய ஆசைப்படுவது, அழிவைத் தரும் என்பதை உணர்ந்து, பிறன் பொருளை விரும்பா பெருமையே வாழ்வில் வெற்றியைத் தரும்.

செல்வி ஷங்கர் - 27082008













Saturday, July 19, 2008

17 : அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவந்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு - 01

ஒருவன் தன் மனத்தின்கண் பொறாமை இல்லாத இயல்பை ஒழுக்கமாகக் கொள்ள வேண்டும். நினைவு சொல்லாகும். சொல் செயலாகும். செயல் நம் இயல்பை வெளிப்படுத்தும். எனவே அழுக்காறாமை உள்ளத்தின் கண் வேண்டும்.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின் - 02

எவரிடத்தும் பொறாமை இல்லாத பண்பினை ஒருவன் கொள்வானே யானால் அதை விட அவனுக்குப் பெருமை தரும் சிறப்புகள் வேறு எதுவும் இருக்க முடியாது.

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான் - 03

இப்பிறப்பில் செல்வமும் மறு பிறப்பில் அறமும் வேண்டாமென்பவனே பிறரது செல்வ வளர்ச்சிக்கு உதவாது பொறாமைப் படுபவன்.

பொறாமைக்குணம் செல்வத்தையும் சிறப்பையும் கெடுக்கும். செல்வமும் சிறப்புமின்றி மனிதன் எப்படி வாழ்வது ? அதற்கு பொறாமையை விட்டு விட்டு வாழலாமே !

அழுக்காற்றின் அல்லவை செய்யர் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து - 04

தீநெறியால் ஏற்படும் குற்றத்தை உணர்ந்த அறிவுடையார் பொறாமை கொண்டு அறனழிக்க வல்ல தீயவற்றை ஒரு போதும் செய்யார்.

அழுக்காறு உடையார்க்(கு) அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது - 05

அழுக்காறு உடையவர்களுக்கு வேறு பகைவர்களே வேண்டாம். அப் பொறாமைப் பண்பு ஒன்றே அவருக்கு அழிவைத் தந்து விடும்.

கொடுப்ப(து) அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும் - 06

பிறருக்குக் கொடுப்பதைப் பார்த்துப் பொறாமைப்படுபவனின் சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவுமின்றிக் கெடும். இவன் பாவம், இவன் சுற்றத்தையே அழிக்கும் என்றால், இவனும் சிறப்பழிவான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ !

அவ்வித்(து) அழ்க்கா(று) உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும் - 07

பிறர் ஆக்கம் கண்ட இடத்துப் பொறாமைப் படுபவனைக் கண்டு பொறுக்காத செல்வத் திருமகள் தான் சேராது தம் தமக்கைக்குக் காட்டி விடுவாள். துன்பத்திற்கு வழிகாட்டிச் செல்பவள் திருமகளின் தமக்கை.

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும் - 08

பொறாமை என்ற பாவி அதனை உடையானின் செல்வத்தை அழித்து அவனையும் தீய வழியில் செலுத்தி விடும்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும் - 09

பொறாமை உடையவனின் செல்வச் செழிப்பும் நற்பண்புடையவனின் வறுமை வாழ்வும் இவ்வுலகில் நினைத்துப் பார்க்கப் படும். காரணம் பிறவிப் பயனாக இருக்கலாம்.

அழுக்கற்(று) அகன்றாரும் இல்லை அஃதில்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் - 10

பொறாமை உடையவன் புகழ் பெறுதலுமில்லை. அஃதில்லாதவன் அழிந்து விடுவதுமில்லை.

செல்வி ஷங்கர் - 19072008

Wednesday, July 16, 2008

16 : பொறையுடைமை

01 : அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை

தன்னைத் தோண்டுபவனையும் விழாமல் தாங்கி நிற்கும் நிலம் போல் நாம் நம்மை இகழ்ந்து பேசுபவர்களையும் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

02 : பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனின் நன்று

நாம் பிறர் செய்த தீங்கினைப் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும். முடிந்தால் அதனை மறந்து விடுதல் அதனினும் நன்று.

03 : இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார் பொறை

வறுமையில் மிகப் பெரிய வறுமை நம் வீட்டிற்கு வரும் விருந்தினரை நாம் வரவேற்காமல் இருப்பதே. அதைப் போல் வலிமையில் மிகப் பெரிய வலிமை, அறியாமல் நம்மை இகழ்ந்து பேசுபவரை நாம் பொறுத்துக் கொள்வதே !

04 : நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்

நற் பண்புகள் நம்மை விட்டு நீங்காமல் இருக்க வேண்டுமானால் நாம் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். பிறர் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வதே உயர் பண்பு.

05 : ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து

ஒருவர் செய்த தீங்கைப் பொறுக்காது தண்டித்தவரை இந்த உலகம் ஒரு பொருட்டாகக் கருதாது. ஆனால் அச்செயலைப் பொறுத்துக் கொண்டவரை பொன்னைப் போற்றிப் புகழ்வது போல் போற்றி மகிழும்.

06 : ஒறுத்தார்க்(கு) ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்

தமக்குத் தீங்கு செய்தவனைத் தண்டித்தவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பம். ஆனால் அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு இந்த உலகம் உள்ளவரை புகழ்.

07 : திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று

தகாத செயலை நமக்குப் பிறர் செய்யினும் அதற்காக நாம் மனம் வருந்தி அவர்க்கு நன்மை தராத செயலைச் செய்யாதிருத்தல் நன்று. தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்.

08 : மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்

மிகுந்த சீற்றம் கொண்டு கொடிய தீச்செயலை நமக்குச் செய்தவரை நாம் நம்முடைய பொறுமை என்னும் தகுதியால் வென்று விடல் வேண்டும்.

09 : துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்

பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்பவர்கள் ஆசைகளைத் துறந்த துறவியரைக் காட்டிலும் மேலானவர்கள் ஆவர்.

10 : உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்

உண்ணா நோன்பினை மேற்கொள்ளும் பெரியவர்களும் பிறர் சொல்லும் கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களின் பின் வைத்தே எண்ணப் படுவர். பொறுமை என்பது துறவினும் மேலானது.

செல்வி ஷங்கர் - 16072008

Sunday, July 13, 2008

இரண்டில் ஒன்று

சிறகுகள் இரண்டு பறப்பதற்கு
சக்கரங்கள் இரண்டு ஊர்வதற்கு
கண்கள் இரண்டு பார்ப்பதற்கு
காதுகள் இரண்டு கேட்பதற்கு
கைகள் இரண்டு செய்வதற்கு
கால்கள் இரண்டு நடப்பதற்கு
ஆனால் உள்ளம் ஒன்று தான்
உணர்வதற்கும் உணர்த்துதற்கும்

15 : பிறன் இல் விழையாமை

01 : பிறன்பொருளால் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்க்கண் இல்

மாற்றான் மனைவியைத் தனதாக்கிக் கொள்ள விரும்பும் அறியாமை இவ்வுலகில் அறம் பொருள் கண்ட ஆன்றோரிடத்து இல்லை.

02 : அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்

நல்லவற்றை எல்லாம் மறந்து, தீயவற்றைச் செய்யும் தீயவரினும் தீயவர் மாற்றான் மனைவியை விரும்பி அவர் வீட்டின் முன் நிற்கும் பேதையரே !

03 : விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்தொழுகு வார்

நன்கு அறிந்தாரின் மனைவியை விரும்பி தீமை புரிபவர்கள் உயிரோடு இருந்தாலும் இறந்தாரே ! மானம் உயிர். மானமிழந்து வாழ்தல் உயிர் துறந்து வாழும் உணர்வற்ற வாழ்வே !

04 : எனைத்துணையர் ஆயினும் எண்ணாம் தினைத்துணையும்
தேரான் பிறன்இல் புகல் ?

சிறிதும் நினைத்துப் பார்க்காமல் மாற்றான் மனைவியை விரும்புபவன் எவ்வளவு புகழும் பெருமையும் உடையவனாய் இருந்தாலும் அவற்றால் ஒரு பயனுமில்லை. புகழும் பெருமையும் ஒழுக்கத்தால் வருவது. ஒழுக்கம் தவறுதல் உயிரை விடுதலுக்குச் சமமாகும்.

05 : எளிதென இல்இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

எளிதென எண்ணி பிறன் மனைவியை அடைய நினைப்பவன் காலத்தால் அழியாத பெரும் பழியை அடைவான்.

06 : பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண்

நெறி கடந்து மாற்றான் மனைவியை அடைய நினைப்பவன் இடத்தே பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கும் நீங்காது நிற்கும்.

07 : அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலான்
பெண்மை நயவா தவன்

அற வழியில் சென்று இல்லறம் நடத்துபவன் என்பவன் பிறருக்கு உரிமை உடைய பெண்மையை ஒரு நாளும் விரும்பான்

08 : பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு

மாற்றான் மனைவியை மனத்தாலும் நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன் மட்டும் அன்று. நிறைந்த ஒழுக்கமும் ஆகும். ஒழுக்கமே அறம்.

09 : நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்

கடல் சூழ்ந்த இவ்வுலகத்தே அனைத்து நலன்களும் கை வரப் பெற்றவர்கள் யாரென்றால் பிறன் ஒருவனுக்கு உரிமை உடையவளின் தோள் சேராதவரே ! நலன் ஒழுக்கத்தால் பெறப்படுவது.

10 : அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான்
பெண்மை நயவாமை நன்று

அறங்களைச் செய்யாது பாவங்களைச் செய்பவனாக இருந்தாலும், அவன் பிறன் மனைவியை விரும்பாதிருத்தலே அவனுக்கு நன்மை தரும்.

செல்வி ஷங்கர் - 13072008


Sunday, July 6, 2008

14 : ஒழுக்கமுடைமை

01 : ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

ஒழுக்கம் ஒருவனுக்கு உயர் சிறப்பைத் தருவதால் அது உயிரைக் காட்டிலும் மேலானதாகும். உயிர் சிறந்ததாயினும் ஒழுக்கம் அதை விட உயர்ந்தது. உயிரை விட்டு விட எண்ணலாம்.ஆனால் ஒழுக்கத்தைத் தவறியும் விடுதல் கூடாது. வாழும் மனிதனுக்கு உயிர் ஒழுக்கம்.

02 : பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை

ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாக எண்ணிக் காக்க வேண்டும். எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் ஒழுக்கத்தை விட உயிருக்குத் துணையானதும் மேலானதும் வேறொன்றுமில்லை.

03 : ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

ஒழுக்கமே ஒருவருக்குக் குடிச்சிறப்பாகும். அவ்வொழுக்கம் தவறுதல் மிகவும் இழிந்த பிறப்பாய் விடும். உயர் குடியில் பிறந்தாலும் ஒழுக்கம் தவறினால் அது இழிவாய் நிற்கும்.

04 : மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

வேதத்தைக் கற்றவன் அதை மறந்தாலும் ஒத்துக் கொள்ளலாம். ஆனால் ஒருவன் பிறப்பொழுக்கம் தவறினால் அவன் சிறப்பே கெட்டு விடும். கற்றது மறக்காது; தவறினால் ஒழுக்கம் மீண்டும் பெற முடியாது.

05 : அழுக்கா(று) உடையான்கண் ஆக்கம்போன்(று) இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு

பொறாமை உடையவன் இடத்தே வளரும் செல்வம் இல்லை. அது போல் ஒழுக்கம் இல்லாதவனிடத்தில் உயர்வில்லை.

06 : ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்(கு) அறிந்து.

நெஞ்சுரம் மிக்கொர் ஒரு போதும் ஒழுக்கம் தவறார். காரணம் ஒழுக்கம் தவறுதலினால் வரும் குற்றத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் எண்ணம் மேலோங்கி நிற்பதனால். ஒழுக்கமே அவர்க்கு மனவலிமை.

07 : ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி

ஒழுக்கத்தால் மேலான புகழைப் பெறுவர். ஒழுக்கம் தவறுதலால் தீராத பழியை அடைவர். பழி, பாவத்தை விடக் கொடியது. செய்யக்கூடாத செயலைச் செய்வதால் பெறுவது பாவம்; செய்யாத செயலுக்கு ஆளாவது பழி.

08 : நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்

நன்மைக்கு வழி காட்டுவது நல்லொழுக்கம். தீராத துன்பத்தைத் தருவது தீயொழுக்கம்.

09 : ஒழுக்கம் உடையார்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்.

ஒழுக்கமுடையவர்கள் மறந்தும் கூட நாத்தவறி தீய சொற்களைக் கூற மாட்டர்; எண்ணவும் மாட்டர்; செய்யவும் மாட்டர்.

10 : உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

உலக நடைமுறை ஒழுக்கத்தைக் கல்லாதவர்கள் எவ்வளவுதான் கற்றிருந்தாலும் அறிவற்றவராகவே கருதப்படுவர். நன்மையைச் செய்வதும்;தீமையை மறப்பதும், உண்மையைச் சொல்வதும்; பொய்ம்மையைத் தவிர்ப்பதும், ஆக்கத்தை நினைப்பதும்; அழிவை மறப்பதும் உலக நடையாகும்.

செல்வி ஷங்கர் : 06.07.2008