Monday, November 26, 2007

படைத்தோன் மன்றப் பண்பிலாளனே !! .... புறம்

ஏற்றத்தாழ்வு மிக்க உலகம் எதனால் உண்டாகியது? உழைத்து உயர வேண்டும் என்ற உன்னத நோக்கம் இல்லாத மனிதர்களால் தான் உண்டாகியது. இயற்கையின் படைப்பில் வாழ்க்கை வளமுடையதாகத் தான் உலகு படைக்கப் பட்டது. பண்பாடில்லாத மக்கள் தம் மனம் பக்குவப்படாமையால் உலகைப் படுத்தி பகுத்து விட்டனர்.


வறுமையால் வாடுவதை எவரும் ஏற்றுக் கொள்வதில்லை. வாழ்க்கைக்கு அறம் பொருள் இன்பம் என்று இலக்கணம் வகுத்த வள்ளுவனும் வறுமையைச் சாடுகிறான். நெருப்பில் கூட ஒருவன் தூங்கி விட முடியும் ஆனால் வறுமையில் வாழ முடியாது ; அது கொடுமை என்று கூறுகின்றான்.


நேரிய வழியில் பொருளீட்டி, ஈட்டியவற்றைப் பகுத்து, நல்வழி வாழ வழி காட்டுகின்றான். ஒருவன் கையேந்தி பிச்சை எடுத்துத்தான் வாழ வேண்டும் என்ற ஒரு நிலை ஏற்பட்டால் அதற்காக அவனைச் சாடவில்லை. புலவன் அப்படிப் படைத்த படைப்பாளன் பரந்து கெடுக என்கின்றான். தெய்வ நூலில் தெய்வத்தை தேவனாய் வழி பட்ட புலவன், வறுமை உலகைப் படைத்தோனையே பண்பிலாளன் எனச் சாடுகின்றான்.


நினைவும், சொல்லும், செயலும் நேரிய வழியில் செயல் பட்டால் வறுமை இவ்வுலகை விட்டுப் பறந்து செல்லும். பாருலகம் பண்பட்டு வளமான வாழ்க்கைப் பாடம் படிக்கும்.

Saturday, November 17, 2007

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன - புறம்

இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி. ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி. இது வாழ்க்கையை அனுபவித்த கவியரசின் கவிதைத் தொடர்கள். மனம் மயங்குகின்ற நேரங்கள் நம்மை அறியாமலே நம்மைச் செயல் படுத்துகின்றன. துன்பத்திலே மூழ்கித் துடிக்கின்ற போது நெஞ்சம் நினைக்கின்ற நினைவுகள் கீதையாகும்.

நம் செயல்களால் தான் நாம் சினங்கொண்டு இருக்கின்றோம். பின்னர் நல்லவையாய் அவை நடை போடுகின்றபோது அச்சினம் கீழிறங்கி அமைதி மெல்ல மெல்ல தலை தூக்குகின்றது. காலத்தின் சூழ்நிலையில் தனிமை ஒரு சுமை தான். ஓடி ஓடி உழைத்தபின் ஒரு நாள் ஓய்வு என்ற படியில் கால் வைக்கின்ற நம் நிலை நினைவலைகள் தடுமாறும் நிலையாமை தான்.

தொடக்கத்திற்கு முடிவு உண்டு. பிறப்பிற்கு இறப்புண்டு. இன்பத்திற்கும் மறு பக்கம் உண்டு. இயல்புக்கும் மாற்றம் உண்டு. இது கால ஓட்டத்தில் நம்மைச் சேருகின்றது. ஆனாலும் மனித மனம் தடுமாறுகிறது. பட்டறிவு பாடம் சொன்னாலும் பயன் நம்மை அலைக்களிக்கின்றது. ஆனாலும் இவற்றை எல்லாம் அந்தப் புறநானூற்றுக் கவிஞன் எப்படித்தான் ஒற்றை அடியில் அடக்கினானோ??

மனந் தெளிவோம்!!!

Wednesday, November 14, 2007

தீதும் நன்றும் பிறர்தர வாரா - புறம்

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.
வாயில் தோறும் வேதனை நிற்கும்.
நம் மானம் என்ற உயிர் காக்க மனக்கதவை மூடிக்கொண்டால் அது நாலு பக்கம் திறந்து கொள்ளும். அப்போது நம் நிலை எவ்வாறு இருக்கும் ?

ஒன்று நம் செயல்களுக்காக நம்மை நாமே நொந்து கொள்ளும் நிலை.
மற்றொன்று பிறரைக் காரணம் காட்டி மனம் மாறுபடும் நிலை. இது ஏன் ?
நம்முடைய வெற்றிகளுக்கும் நன்மைக்கும் நாம் எப்படிக் காரணம் ஆகின்றோமோ அது போல்தான் நம் துன்பங்களுக்கும் தோல்விகளுக்கும் நாம் தாம் காரணம்.

இன்பத்தைக் கண்டு மனம் மகிழ்கின்ற நாம் துன்பத்தைக் கண்டு
துவளும் போது பிறரைக் கை காட்டுகிறோம். தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை! நாமே தான் நம் செயல்களுக்குக் காரணம். நம்மை விட்டுப் பிரியாத நிழலைப் போன்று நம் செயல்களின் பயனும் நம்மைத்தான் பின் தொடரும்.

விதை விதைத்தால் பழம் பெறலாம்.
வினை விதைத்தால் வினைதான் விளையும்.
நல்வினை என்றால் நற்பயன். தீவினை என்றால் தீமைப்பயன்.

இதை நம் மனத்தில் கொண்டால் நாம் பிறர் மீது சினங் கொள்ள மாட்டோம். புன்னகைப்பது ஒன்றும் புரியாத தத்துவமில்லையே !
புரிந்து செயல்களைச் செய்வோம் ! புன்னகைப்போம் !!!

Wednesday, November 7, 2007

ஒரு முன்னுரை ...........



இலக்கியங்கள் சில நேரங்களில் நம் சிந்தனையைக் கிளறுகின்றன; இதயத்தைத் தொடுகின்றன!. பாடலின் பொருள் ஆழத்தைப் பார்த்தால் அவை நம் மன ஆழம் வரைக்கும் செல்கின்றன. அந்தப் படைப்பாளன் வாழ்ந்த காலத்தையும், அவன் வாழ்ந்த வாழ்க்கைச் சூழலையும் வைத்துப் பார்த்தால் அவனால் எப்படி இப்படி எல்லாம் சிந்திக்க முடிந்தது என்று நமக்கே வியப்பாய் இருக்கிறது!

எத்தகைய கருத்தையும் அவன் தன் வாழ்வின் பட்டறிவோடு தான் சிந்தித்திருக்க முடியும். தமிழிலக்கியத்திலே புறப்பாடல்கள் சில இன்னும் காலத்தால் மனித மனங்களைப் புடம் போட்டுக்கொண்டிருக்கின்றன. திருக்குறளின் சீரிய கருத்துகள் இன்றும் கால ஓட்டத்தில் காலூன்றி நிற்கின்றன.

இந்த, காலத்தால் அழியாத காவியங்களைத் தீட்டிய கவிஞர்களை நினைத்துப் பார்த்தால் என் நெஞ்சம் விம்முகிறது!. நினைவுகள் சிதறுகின்றன!. நிகழ்வுகள் என்னைச் சிறைப் பிடிக்கின்றன!. அந்த நினைவோட்டத்தில் நான் என் சிந்தனைச் சிறகுகளால் சிறகடித்துப் பறக்கின்றேன்!. அதை என் ஏட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறேன்!. இது என் எண்ணம்!. என் எண்ணப்பறவை!. இப்பறவை வட்டத்துக்குள் சுற்றுவதால் இடை இடையே தொடக்கங்கள்!.

பதிவுகள் தொடரும்.